மக்களவைத் தேர்தலில் தமாகா பின்னடைவை சந்தித்ததை அடுத்து, கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா, தனதுபதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் நடைபெற்ற தமாகா செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் மற்றும்வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில், கட்சியின் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைப்பு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. நான் கடந்த 10 ஆண்டுகளாக இளைஞரணி மாநிலத் தலைவராக செயல்பட்டு வந்துள்ளேன். அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், எனது மாநிலத் தலைவர்பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து, அதற்கான கடிதத்தை கடந்த 16-ம் தேதி வாசனிடம் வழங்கினேன். அதே நேரத்தில், தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காக வாசன் தலைமையின் கீழ் பயணிப்பேன்.கட்சிக்குள் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எடுக்கக் கூடிய முடிவுக்கு முன்மாதிரியாக, ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளேன். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமாகா பொதுச் செயலாளர் விடியல் சேகர் கூறும்போது, “மாநில செயற்குழுக் கூட்ட முடிவுகளின்படி, மாநில, மாவட்ட, துணை அமைப்புகளின் நிர்வாகிகள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தலைவர் வாசன் எடுத்த முடிவின்படி, தற்போதைய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஓரிரு நாட்களில் பதவியேற்க உள்ளனர்” என்றார்.