கிராமங்கள், நகரங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அண்ணாமலையின் `வீ த லீடர்ஸ்’ இயக்கத்தில் உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு முகாம்களை அவரது ஆதரவாளர்கள் நடத்தி வருகின்றனர்.
10 நாட்களில் 40 லட்சம் உறுப்பினர்களை இயக்கத்தில் இணைக்க தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி `வீ த லீடர்ஸ்’ என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
இதையடுத்து, தமிழக பாஜகவில் முக்கியப் பொறுப்புகளில் வகித்து வந்த முன்னணி நிர்வாகிகள் பலரும், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தங்களது ஆதரவாளர்களுடன் கூட்டமாக அண்ணாமலையின் இயக்கத்தில் தங்களை இணைத்து வருகின்றனர்.
குறிப்பாக, கரு.நாகராஜன், சுமதி வெங்கடேசன் ஆகியோரைத் தொடர்ந்து, மாநில செயற்குழு உறுப்பினர் மனோகரன், மாநில செயலாளர் அலிசா அப்துல்லா உள்ளிட்ட பலரும் பாஜகவிலிருந்து விலகி வீ த லீடர்ஸில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணாமலையின் புதிய இயக்கம் உறுப்பினர் சேர்க்கையில் வேகத்தைக் காட்டி வருகிறது. அண்ணாமலை இயக்கம் தொடங்கிய முதல் 10 மணி நேரத்தில், 10 லட்சம் பேர் இணைந்தனர்.
மூன்றாவது நாளான நேற்று உறுப்பினர் சேர்க்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் உறுப்பினர்கள் சேர்க்கையை மேலும் அதிகரிக்கச் சிறப்பு முகாம்களை அவரது ஆதரவாளர்கள் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்துள்ள முன்னாள் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மனோகரன் கூறுகையில், “சென்னை மேற்கு மாவட்டத்திலிருந்து மட்டுமே பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 80 சதவீதம் பேர் கட்சியிலிருந்து விலகி, அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்துள்ளோம்.
துடிப்பான ஓர் இளம் தலைமையை விரும்பி, இந்த இயக்கத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். `வீ த லீடர்ஸ்’ இயக்கத்தில் இணைய கிராமப்புற மக்களும், பாமர மக்களும் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் எவ்வாறு இணைவது என்று தெரியாததால், அவர்களின் வசதிக்காக அனைத்து கிராமப்புறங்களிலும் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதேபோல், நகர்ப்புறங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஏற்கெனவே பல இடங்களில் இந்த முகாம்கள் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுவிட்டன.
3 நாளில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், அடுத்த 7 நாட்களில் மேலும் 20 லட்சம் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 10 நாட்களில் குறைந்தது 40 லட்சம் உறுப்பினர்களை இயக்கத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயித்து, நாங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம்” என்றார்.















