“காங்கிரஸின் நோக்கமே இடையூறு செய்வதுதான்… தீர்வு அல்ல!” – நிர்மலா சீதாராமன்

0
20

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தீர்வை விரும்பவில்லை என்றும், குழப்பத்தையே விரும்புகிறது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்தய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன.

மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், “டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் என்பது மாணவர்களின் தேர்வுக்கான தயாரிப்பு, வினாத்தாள் கசிவு, மறுதேர்வு தொடர்பான விஷயம். அரசு உணர்வுப்பூர்வமாகச் செயல்படாமலோ அல்லது எதிர்வினையாற்றாமலோ இருந்திருந்தால், எதிர்க்கட்சிகள் இத்தகைய கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், பிரதமர் மட்டத்திலேயே இதற்கான பதில் அளிக்கப்பட்டுள்ளது. வினாத்தாளை கசியவிட்டது, வாங்கியது, விற்றது என தேர்வின் புனிதத் தன்மையை குலைத்தவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்படும் என்றும், இதற்கென விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு முன்பாகவே, இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுயநல நோக்கங்களுக்காக வினாத்தாள்களை வாங்கி, விற்று, கசியவிட்ட சாதாரண குடிமக்கள் உட்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கள் குழந்தைகளின் எதிர்கால தொழிலுக்கு இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது மிக முக்கியம் எனக் கருதி, அதற்காக ஆதரவு அளித்து வரும் பெற்றோர்களுக்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற அறிவிப்பு கவனத்தில் கொள்ளத்தக்கது. நாட்டின் இளம் தலைமுறைக்கு எதிராக இக்கொடிய குற்றத்தைச் செய்தவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும், இதற்கென விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் இன்று அறிவித்துள்ளார்.

பிரதமரின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் பகுதியில் அனுமதி இன்றி காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. அவர்களிடம் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டது.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு இப்போது தயாராக இருக்கும் நிலையில், மேலும் பல நிபந்தனைகளை விதித்து அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர்.

நீட் விவகாரத்தையும் இளம் மாணவர்களையும் பயன்படுத்திக்கொண்டு, காங்கிரஸ் கட்சி தனது வழக்கமான பாணியில் நாடாளுமன்றத்தை முடக்குகிறது. விவாதம் நடந்தால், நாட்டின் இளைஞர்கள் தொடர்பான ஓர் உணர்வுப்பூர்வமான விவகாரத்தை அரசியலாக்குவது அவர்கள்தான் என்ற உண்மை தெரிந்துவிடும் என்பதால் அவர்கள் விவாதத்தை தவிர்க்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த எந்தக் காரணமும் இல்லை. அவர்கள் நியாயமான விவாதத்தை விரும்புவதில்லை.

இப்போதும்கூட எதிர்க்கட்சிகளிடம், குறிப்பாக காங்கிரஸ் கட்சியிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். விரிவான விவாதத்தில் ஈடுபடுங்கள். பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதியுங்கள். பதில் அளிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களுக்கு எதிராக கூச்சலிட்டு பேசவிடாமல் தடுப்பதில் எந்தப் பயனும் இல்லை. அவையின் தலைவர் பேச தயாராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்பது இடையூறு செய்வது மட்டுமே; அவர்களுக்குத் தீர்வுகள் தேவையில்லை” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here