தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க அரசு ஆலோசிக்கலாம் என தெரிவித்து இதுகுறித்து அரசு அதிகாரிகள் வரும் 28-ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பல பெண் பணியாளர்கள், கடுமையான மாதவிடாய் வலியால் சமாளித்தபடியே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும் முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை அரசு உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போது தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசு உரிய ஆலோசனை நடத்தலாமே, இதில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மட்டுமல்லாமல் அன்றாட வேலைக்குச் செல்லும் பெண்களும் பயன்பெறும் வகையில் உரிய முடிவு எடுக்கலாமே என கேள்வி எழுப்பினர்.
பின்னர், இது தொடர்பாக அதிகாரிகள் 28-ம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.















