இலங்கை அதிபர் தேர்தலை ஓராண்டு தாமதமாக நடத்த வேண்டும்: முன்னாள் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கோரிக்கை

0
278

இலங்கையில் அதிபர் தேர்தலை ஓராண்டுக்குத் தாமதப்படுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள்தேசியக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வட மாகாணமுதல்வருமானசி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

இலங்கையில் 2019-ல் நடந்த அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 2020-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 225 இடங்களில், 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெற்று, மகிந்த ராஜபக்ச பிரதமரானார்.கரோனா பரவல், பொருளாதார நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள்போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் ராஜினாமா செய்தனர்.2022 ஜூலை மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக தினேஷ் குணவர்தனவும் தேர்வு செய்யப்பட்டனர். அதிபர்ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்தில் நிறைவடைவதால், அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16-ம் தேதிக்குள் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழ் மக்கள்தேசியக் கூட்டணியின் தலைவரும், இலங்கை வட மாகாண முன்னாள் முதல்வருமான விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிபர் தேர்தலைத் தாமதப்படுத்துவது இலங்கை முழுமைக்கும் நன்மை பயக்கும். குறிப்பாக, தமிழர்களுக்கு நன்மை பயக்கும். இலங்கை அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாத நிலைமைதான் காணப்படுகிறது. இதனால், அரசியல் உறுதித்தன்மை இல்லாமல் போகும்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் தொடரும் நிலையில், அரசியல் உறுதித்தன்மை இல்லாது போனால் மேலும் மோசமான பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும். தேர்தலுக்காகப் பெருமளவு நிதி செலவழிக்கப்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டு, அதுவும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். எனவே, ஓராண்டு காலத்துக்கு அதிபர் தேர்தலைத் தள்ளிப்போட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here