கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான போலீசார் கோட்டார் வெள்ளாடிச்சிவிளை அருகே ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 இளைஞர்கள் சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த மணிபாரதி (வயது 20), சுசீந்திரம் காக்கமூர் பகுதியைச் சேர்ந்த சிவன் (24), கோட்டார் வாகையடி வடக்கு தெருவைச்சேர்ந்த ஈஸ்வர் (20), கோட்டார் கம்பளம்ரோடு பகுதியைச் சேர்ந்த முகேஷ் (22), மயிலாடி மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த தனுஷ் (20), கோட்டார் ஆறுமுகம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சாந்த குமார் (26) என்பதும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 15 கிராம் கஞ்சா பொட்டலங்களையும், விற்பனைக்காக பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.