மணவளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (35). இவர் எலக்ட்ரீஷியன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரன் என்பவர் வீட்டிற்கு வேலைக்குச் சென்றார். அப்போது ராமச்சந்திரன் மகள் கார்த்திகா (25) என்பவருடன் கிருஷ்ணகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டு, தக்கலை அருகே உள்ள குமார கோவிலில் கிருஷ்ணகுமார் கார்த்திகா மோதிரம் மாற்றினர்.
தொடர்ந்து கார்த்திகா பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்குப் பெங்களூர் சென்று விட்டார். அன்று முதல் கார்த்திகா படிப்புச் செலவு, ராமச்சந்திரன் குடும்பச் செலவு என மொத்தமாக ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் வரை கிருஷ்ணகுமார் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து திருமண பேச்சு வந்த போது திருமணம் செய்து வைக்க முடியாது என்று ராமச்சந்திரன் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
கிருஷ்ணகுமார் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் பணத்தையும் கொடுக்க முடியாது என்று கூறியதால் கிருஷ்ணகுமார் இரணியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு விசாரித்த நீதிபதி திருமண மோசடி செய்த ராமச்சந்திரன் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன் பெயரில் மணவளக்குறிச்சி போலீசார் மோசடி செய்ததாக ராமச்சந்திரன், அவரது மனைவி சரோஜினி, கார்த்திகா மற்றும் அவரது தம்பி கார்த்திக் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.