அருமனை அருகே செறுவல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (65). மீனவர். இவரது மனைவி அருள் ராணி (57) இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இரண்டாவது மகன் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். சமீபகாலமாக ஆல்பர்ட் தீராத நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று அருள் ராணி மருந்து வாங்க குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டார். இரண்டாவது மகன் தனது மனைவியுடன் திருவனந்தபுரத்துக்கு சென்று விட்டார்.
வீட்டில் தனியாக இருந்த ஆல்பர்ட் மின்விசிறி கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆல்பர்ட் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.