கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் பழைய நகைகளை மீட்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 11ஆம் தேதி இவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 196 கிராம் தங்க நகைகள் ஒரு நகைக்கடையில் அடமானத்தில் உள்ளதாகவும், அதை திருப்பி விற்பனை செய்ய ரூ. 12 லட்சம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இதை நம்பிய கண்ணன் ரூபாய் 12 லட்சம் எடுத்துக் கொண்டு ஆளூர் பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு 25 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கண்ணனிடம் ரூபாய் 12 லட்சம் வாங்கி விட்டு தப்பிச் சென்று விட்டார். இது குறித்து கண்ணன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது ஆளூர் பகுதியை சேர்ந்த சுடர்சன் (24) என்பது தெரிய வந்தது. விசாரணையில் சுடர்சன் பணத்துடன் ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை கண்காணித்து வந்தனர். நேற்று மாலையில் ஆளூர் வந்த சுடர்சனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ரூபாய் 2 லட்சத்தை சிவா என்ற நண்பருக்கு கொடுத்தது தெரியவந்தது. சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.