பெண்கள் மீதான வன்முறைகளைக் களைய, பாலின சமத்துவத்தை பள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறினார்.
மனித உரிமைப் போராளி பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளை, டாக்டர் கோபிகர் அறக்கட்டளை, இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழுமம், சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் ஹோமியோபதி ஆகியவை சார்பில், மனித உரிமைப் போராளி பி.வி.பக்தவச்சலத்தின் 17-ம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் “பெண்கள் மீதானதொடர் வன்முறை – வேரும் தீர்வும்” என்ற தலைப்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசியதாவது:
பி.வி.பக்தவச்சலத்தின் மக்கள்உரிமைப் போராட்டம் உள்ளிட்ட பன்முகத்தன்மையை முழுமையாக வெளிக்கொணர வேண்டும்.மாஞ்சோலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக ஏராளமான பொதுநல வழக்குகள் தொடர்ந்தார். அவரதுசாதனைகள் நினைவுகூரப்படு வதுடன், அவரை பற்றிய முழு வரலாற்றை புத்தகமாக வெளியிட வேண்டும்.நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் மீதான ஆண்களின் பார்வை, கருத்துகள், வார்த்தைப் பிரயோகம் ஆகியவை பெண்களுக்கு எதிராக இருக்கும்போது, பாலின சமத்துவம், பாலின உரிமையை எப்படி எதிர்பார்க்க முடியும்? எல்லா துறைகளிலும் சம பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பெண்களுக்கு போதிய உரிமைகள் இருந்தாலும், அதற்காக அவர்கள் நீதிமன்றத்தை நாடுவது கடினமாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். நீதித்துறையில் பெண் நீதிபதிகள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண் டும். கேரளாவில் கீழமை நீதிமன்றங்களில் 72 சதவீதம் பெண்கள்நீதிபதிகளாக இருப்பது வரவேற்கத்தக்கது.
பள்ளிகளில் இன்னமும் பெண் குழந்தைகளுக்கு “குட் டச், பேட் டச்” சொல்லித் தருகின்றனர். இது கற்கால அணுகுமுறையாகும். இப்போது பெண் குழந்தைகளுக்கு `தொடவே கூடாது (டோண்ட் டச்)’ என சொல்லித் தர வேண்டும். போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், ஆசிரியர்களுக்கும் புரிதல் ஏற்பட வேண்டும்.
பாலின பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டுமெனில், பெண்கள் மீதான ஆண்களின் பார்வையும், சிந்தனையும் மாற வேண்டும். பாலின சமத்துவம் பள்ளிகளில் இருந்து தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமுதாயமுமே பெண்ணைப் பாதுகாக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறுநீதிபதி சந்துரு பேசினார்.
“பெண்கள் மீதான வன்முறைகள் – சட்டங்கள் அறிவோம், வன்முறைகளை களைவோம்” என்ற புத்தகத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் மயிலைபாலு வெளியிட, டாக்டர் கோபிகர் அறக்கட்டளை தலைவர் டாக்டர் எஸ்.ஜெகதா பெற்றுக் கொண்டார். வழக்கறிஞரும், நூலாசிரியரு மான பி.எஸ்.அஜிதா புத்தகத்தை அறிமுகம் செய்துவைத்தார்.
நிகழ்ச்சியில், இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழும பொதுச் செயலாளர் டாக்டர்பாலமுருகன், சமூக சமத்துவத்துக் கான மருத்துவர்கள் சங்கச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.