ஜம்மு காஷ்மீரில் கல் வீசியவர்கள், தீவிரவாதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள், தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனாவை ஆதாரித்து நவ்ஷேரா பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல் வீசியவர்கள் மற்றும் தீவிரவாதிகளை ஆட்சிக்கு வந்தபின் விடுவிப்போம் என தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.ஜம்முவில் மீண்டும் தீவிரவாதத்தை கொண்டுவருவதுபற்றி பரூக் அப்துல்லா பேசுகிறார். அவருக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இது மோடி அரசு. தீவிரவாதத்தை நாங்கள் குழிதோண்டி புதைப்போம். தீவிரவாதிகள், கல் வீசியவர்கள் எக்காரணம் கொண்டும் விடுவிக்கப்பட மாட்டார்கள்.
பாகிஸ்தானுடன்… அதேபோல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் கூறிவருகின்றன. தீவிரவாதம் ஒழியும் வரை, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என பரூக் அப்துல்லாவுக்கும், ராகுலுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். காஷ்மீரில் பின்தங்கிய சமூகத்தினருக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை யாரும் மாற்ற முடியாது.
காஷ்மீரின் எல்லை கிராமங்களில் பதுங்கு குழிகள் இனி அமைக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தும் தைரியம் இனி யாருக்கும் இருக்காது. பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினால், நாங்கள் பீரங்கி குண்டால் பதிலடி கொடுப்போம். இவ்வாறு அமித் ஷா பேசினார்.