ஹைதராபாத் கூகட்பல்லி பகுதியில் உள்ள ‘கிளப் மஸ்தி’ எனும் பார் வெகு பிரசித்தம். இதனை ‘குயின்ஸ் அண்ட் கிங்ஸ் பப்’ என்றும் அழைப்பர். இங்கு இரவில் நிபந்தனைகளை மீறி ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என கேளிக்கை விருந்துகள் நடந்து கொண்டே இருக்கும்.
இந்த பாரில் இளம் பெண்கள் நடனமாடியபடியே, கஸ்டமர்களை கவர்ந்து, அவர்களை அளவுக்கு அதிகமாக மதுபானம் குடிக்க வைத்து, பணத்தை பில்லுக்கு மேல் போட்டு தீட்டுவதும் வழக்கம் என கூறுவர். அப்படியே அந்த கஸ்டமரை மடக்கி அதே பாருக்குள் உள்ள அறைகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் புகார்கள் உண்டு. மேலும், 18 வயதுக்குள் உள்ள மைனர்களும் மிக அதிகமாக வரும் பார் இது தான் எனும் பெயரும் இதற்கு உண்டு.
இவ்வாறு பல நிபந்தனைகளை மீறி நடக்கும் இந்த பார் மீது பல்வேறு புகார்களும் வழக்குகளும் உள்ளன. இதனிடையே சைபராபாத் பகுதிக்கு 2020 தெலங்கானா பிரிவைச் சேர்ந்த ரித்தி ராஜ் இணை போலீஸ் ஆணையராக பணியில் சேர்ந்தார். இவருக்கு வந்த ரகசிய தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு சாதாரண பெண்ணைப் போல் கூகட்பல்லி கிளப் மஸ்தி பாருக்கு சென்றார். அங்கு நடக்கும் அனைத்தையும் கவனித்தார். உடனே, வெளியில் காத்திருந்த போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் அதிரடியாக அந்த பாருக்குள் நுழைந்தனர்.
அப்போது பாருக்குள் நிபந்தனைகளை மீறி நடந்து கொண்ட 5 ஆண்கள் மற்றும் 4 பெண்களை கைது செய்து அழைத்துச் சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார். அப்போது இந்த பாரின் பின்புலமாக இருந்து செயல்படும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் குறித்தும் தெரியவந்தது. மேலும், இந்த பாரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கை மாறுகிறதா ? எனும் கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.















