மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு செப்டம்பர்3-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருக்க வேண்டியது மிக முக்கியம். மாநிலங்களவையில் தற்போது உறுப்பினர்களின் மொத்தஎண்ணிக்கை 229-ஆக உள்ளது.இதில் பாஜகவுக்கு 87 எம்.பி.க்கள் உள்ளனர். தே.ஜ. கூட்டணி கட்சியினரை சேர்த்தால் இந்த எண்ணிக்கை 105 ஆகவும், 6 நியமனஎம்.பி.க்களின் ஆதரவை சேர்த்தால்தே.ஜ.கூட்டணியின் பலம் 111-ஆக உள்ளது. ஆனாலும் பெரும்பான்மைக்கு 4 உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பு ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசாவில் நவீன் பட்நாயக் ஆகியோர் மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துவந்தனர். தற்போது அந்த நிலை மாறியுள்ளது. எதிர்க்கட்சிகளின் பலம் 84 ஆக உள்ளது.செப். 3-ம் தேதி தேர்தல்: மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், சர்வானந்த சோனோவால், ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர்மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் மாநிலங்களவையில் காலியிடங்களின் எண்ணிக்கை 12-ஆக உள்ளது. இவற்றைநிரப்ப அடுத்த மாதம் 3-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் இவற்றில் போட்டியிட 9 வேட்பாளர்களின் பெயரை பாஜக அறிவித்துள்ளது. கடந்தமார்ச் மாதம் பாஜகவில் இணைந்தபஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங்கின் பேரன் ரவ்னீத் சிங் பிட்டுமக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார். ஆனால் அவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவர் 6 மாதத்துக்குள் எம்.பி.யாக வேண்டும் என்பதால், அவர் தற்போது மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் மத்தியப்பிரதேசத்தில் இருந்து அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஜார்ஜ் குரியனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானாவில் 4 முறை காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருந்த கிரண் சவுத்திரி கடந்த ஜூன் மாதம் பாஜகவில் சேர்ந்தார். இதனால் இவரது பெயரும் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான மமதா மொகந்தா சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். இவர் ஒடிசாவின் மயூர்பன்ச் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள குதுமி இனத்தைச் சேர்ந்தவர். இதனால் இவரது பெயரையும் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. ஒடிசா சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் அதிகம் இருப்பதால், இவர் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார். பிஹார்மாநிலத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மனன் மிஸ்ரா,பார் கவுன்சில் தலைவராக உள்ளார்.அவரை மாநிலங்களவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. அசாம் மாநிலத்திலிருந்து ரஞ்சன் தாஸ் மற்றும் ராமேஸ்வர் தெலி ஆகியோரையும் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
இவர்கள் தவிர திரிபுராவில் இருந்து ராஜிப் பட்டாச்சர்ஜி, மகாராஷ்டிராவிலிருந்து தயர்யாசில்பாட்டீல் ஆகியோரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். மாநிலங் களவை தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலங்களவையில் தே.ஜ.கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும்.