உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது 700 மெகாவாட் அணு உலை நேற்று முழு திறனுடன் உற்பத்தியை தொடங்கியது. இதுகுறித்து இந்திய அணு மின் சக்தி கழகம் (என்பிசிஎல்) வெளியிட்ட அறிக்கையில், “குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ரபார் அணு மின் நிலையத்தில் (கேஏபிஎஸ்) நிறுவப்பட்டுள்ள 4-வது அணு உலை முழு திறனுடன் உற்பத்தியை தொடங்கி உள்ளது. இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது 700 மெகா வாட்அணு உலை ஆகும். முதல் 700 மெகாவாட் அணு உலை இதே நிலையத்தில் (3-வது) ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது” என கூறப்பட்டுள்ளது.
கேஏபிஎஸ்-4 அணு உலை கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதிமுதல் முறையாக பரிசோதிக்கப் பட்டது. இது வெற்றி அடைந்ததால், கடந்த மார்ச் 31-ம் தேதி வணிக ரீதியில் உற்பத்தியை தொடங்கியது. அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதியுடன் இதன் உற்பத்தித் திறன் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இப்போது முழு உற்பத்தித் திறனுடன்செயல்படத் தொடங்கி உள்ளது. இதே வடிவமைப்பில் மேலும் 14 அணு உலைகளை (700 மெகாவாட்) என்பிசிஎல் நிர்மாணித்து வருகிறது.நாடு முழுவதும் என்பிசிஎல் சார்பில் இப்போது 24 அணு உலைகள் இயங்கி வருகின்றன. இதன் மின் உற்பத்தித் திறன் 8,180 மெகாவாட் ஆகும். மேலும் 6,800 மெகாவாட் திறனுள்ள 8 அணு உலைகளை நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதுதவிர, 7 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மேலும் 10 அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால் வரும் 2031-32-ல் நாட்டின் மொத்த அணு மின் உற்பத்தித் திறன் 22,480 மெகாவாட் ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.