ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டம், ராம்பில்லி மண்டலம், அச்சுதாபுரம் எனும் ஊரில் ஒரு தனியார் பார்மா நிறுவனம் உள்ளது. இங்கு 3 ஷிப்ட்களில் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஷிப்டிலும் சுமார் 300 முதல் 380 பேர் வரை பணி புரிவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம்ஷிப்டின் போது, தொழிற்சாலைக்குள் இருந்த ரியாக்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டது. சுற்றுப்புற கிராமங்களுக்கும் இந்த சத்தம் கேட்டுள்ளது. உடனே தொழிலாளர்கள் பலர் அலறி அடித்து கொண்டு தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடி வந்தனர். இது குறித்து தீயணைப்பு படைக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனே 12 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர். ரியாக்டர் வெடித்ததால் அந்த கட்டிடம் சரிந்துள்ளது. இதன் அடியில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். அதில் இரவு 9 மணி நிலவரப்படி 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 5 அல்லது 6 பேர் இறந்திருக்கலாம் என கூறப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.தகவலறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்ததோடு, காயமடைந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென அனகாபல்லி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.