திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, கலப்பட நெய் வாங்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அறிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் பக்தர்களிடையே பேரதிர்வை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் திருப்பதி மற்றும் திருமலையில் ஆய்வு நடத்தி சிலரை கைதும் செய்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற 7ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், திருப்பதி கலப்பட லட்டு பிரசாதம் குறித்து 10-வது கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது.
அதாவது “திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் நடந்தது குறித்து முழு விசாரணை தேவையா?” எனக் கேட்டு, ஒரு வரியில் பதிலளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. இதற்கு பல மாணவர்கள் லட்டு பிரசாதத்தில் கலப்படம் நடந்ததாகவும், இது குறித்து முழு விசாரணை நடத்தி உண்மையை தெரியப்படுத்த வேண்டுமெனவும் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.














