கன்னியாகுமரி: ஆசிரியர்கள் கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

0
41

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கேரள மாணவி ஒருவர், கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

செல்போன் பறிமுதல்-மன உளைச்சல்

கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கத்திப்பார பகுதியைச் சேர்ந்தவர் அன்சிஜி (வயது 21). இவர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி, கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் ஆசிரியர்கள் அன்சிஜியை சக மாணவர்கள் முன்னிலையில் கடுமையாக கண்டித்தனர்.

மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். இதனால் அன்சிஜி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினார். இது தொடர்பாக அவர் தனது தோழிகளுக்கு அனுப்பிய ஆடியோ பதிவில், கல்லூரி நிர்வாகம் தன்னைத் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வருவதாகக் கண்ணீருடன் தெரிவித்தார்.

விபரீத முடிவு – உயிரிழப்பு

மனவேதனையில் இருந்த மாணவி அன்சிஜி, கடந்த வெள்ளிக்கிழமை மதியம் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். மாடியில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை சக மாணவிகளும், கல்லூரி ஊழியர்களும் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழாமை) அதிகாலை மாணவி அன்சிஜி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் நடவடிக்கை- வழக்குப்பதிவு

மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தடுக்க கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here