பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து பாகலூர், பானசவாடி உள்ளிட்ட 8 காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட இடங்களில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மொத்தமாக 5.91 கிலோ எம்டிஎம்ஏ, 21.82 கிலோ ஹைட்ரோ கஞ்சா, 1.51கிலோ கோக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வெளிநாட்டினர் 3 பேர் (2 பெண்கள் ) உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 5 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். கைதானவர்களிடம் இருந்து 3 கார், 2 இரு சக்கர வாகனங்கள், 9 செல்போன்கள், ரூ.50 ஆயிரத்து 500 ரொக்கம், 28 கிராம் தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.23.61 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கைதான 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ‘கூரியர் மூலம் வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் போதைப் பொருளை வர வழைத்து, பெங்களூருவில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்தது’ தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.














