தமிழ்நாடு ‘முதலமைச்சர் கோப்பை -2024’ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகம் முழுவதும் தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘முதலமைச்சர் கோப்பை – 2024’ விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறஉள்ளது.
இதில் 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள், 17 முதல் 25 வயது வரையுள்ள கல்லூரி மாணவர்கள், 15 முதல் 35 வயது வரையுள்ள பொதுப் பிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர்.அதன்படி மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல,மாநில அளவில் நடத்தப்படுகின்றன. இதற்கான ஆன்லைன் முன்பதிவு https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த ஆக.4-ம்தேதி தொடங்கப்பட்டது. விண்ணப்பப் பதிவுகள் ஆக.25-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், முன்பதிவில் கிடைக்கப்பெற்ற வரவேற்பை தொடர்ந்து கால அவகாசம் செப்.2-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.அந்த வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்றுடன் முடிவடைகிறது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மொத்த பரிசாக ரூ.37 கோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.
அதேபோல் குழு போட்டிகளில் முதல் பரிசாக ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். இந்த போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம்உயர் கல்வி படிப்பிலும், வேலைவாய்ப்புகளிலும் சலுகைகள் பெறமுடியும்.