பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் முகமது ரிஸ்வான் 44, பாபர் அஸம் 37, இர்பான் கான் 22, ஷாகீன் ஷாஅப்ரிடி 24 ரன்கள் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் நசீம் ஷா 39 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 40 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
204 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஷ் 49, ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்களையும், ஷாகீன் ஷா அப்ரிடி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அந்த அணி 155 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் கேப்டன் பாட் கம்மின்ஸ் சிறப்பாக செயல்பட்டு 31 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில்1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி 8-ம் தேதி அடிலெய்டு நகரில் நடைபெறுகிறது.