ஆசிய பாட்மிண்டன் விளையாட்டு: தாய்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன்

0
351

ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டியில், தாய்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

மலேசியாவின் சிலாங்கூரின் ஷா ஆலம் பகுதியில் ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேசியா, தென் கொரியா, சீனா, மலேசியா ஆகிய 7 அணிகள் இடம் பெற்று விளையாடின.

இதில், நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதையடுத்து நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதின.

இறுதிச் சுற்றில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, மகளிர் பாட்மிண்டன் தரவரிசையில்17-வது இடத்தில் உள்ள தாய்லாந்து வீராங்கனை சுபனிடா கேத்தோங்கை 21-12, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் சாய்த்தார். அதன்மூலம் இறுதிச் சுற்றில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற இரட்டையர் போட்டியில் இந்தியவீராங்கனைகள் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள ஜோங்கோல்பன் கிடிதரகுல், ரவிந்தா பிர ஜோங்ஜாய் ஜோடியை 21-16, 18-21, 21-16 என்ற கணக்கில் வீழ்த்தியது.

ஆனால் 2-வது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானிடம்11-21, 14-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ருதி மிஸ்ரா, பிரியா கொன்ஜெங்பாம் ஜோடி, உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள பென்யாபா ஐம்சார்ட், நுண்டகர்ன் ஐம்சார்ட் ஜோடியிடம் 11-21, 9-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

இறுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் 5-வது ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இளம் வீராங்கனையான அன்மோல் ஹார்ப் 21-14 21-9 என்ற புள்ளிகள் கணக்கில் தரவரிசையில் 45-வது இடத்தில் இருக்கும் போர்ன்பிச்சா சோய்கிவோங்கை வீழ்த்தினார்.

இதன்மூலம் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக பி.வி. சிந்து தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here