விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் 8-வது முறையாக மகுடம் சூடுமா?

0
1160

தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்த வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதியில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் தான் அதிக வெற்றியை பெற்றுள்ளனர். இந்த தொகுதி 1952-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது.

ஆனால் 1952 மற்றும் 1954-ல் திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத்திற்கு தேர்தல் நடந்தது.1957, 62, 67-ம் ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டசபைக்காக தேர்தலை சந்தித்தது. 1971-ம் ஆண்டு முதல் தான் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தலை விளவங்கோடு எதிர்கொண்டுள்ளது. அது முதல் 12 பொதுத் தேர்தல்களை விளவங்கோடு சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் 7 முறையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 5 முறையும் வெற்றிக்கனியை பறித்து உள்ளன.

இதில் கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் விஜயதாரணி. இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததால்,தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதனால்தான் விளவங்கோடு தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.

3 முறை கை சின்னத்தில் வென்ற விஜயதாரணி, இந்த முறை பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு தாமரையை மலரச் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது.ஆனால் அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவாரா? என்பது சந்தேகம் என்கின்றனர். தொகுதியைச் சேர்ந்த பலரும். பாரதிய ஜனதா சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜெயசீலனும் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் காங்கிரஸ் கட்சியும் தனது பெருமையை நிலைநாட்ட தொகுதியில் வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது. தொகுதி தங்களுக்கு தான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், மாவட்டத்தில் உள்ள கட்சியின் முக்கிய தலைவர்கள் தற்போதே சீட் கேட்டு, சென்னை மற்றும் டெல்லியில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.

கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு தொகுதியை விட்டுக்கொடுத்த அ.தி.மு.க. தற்போது தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகளின் கோட்டையான விளவங்கோடு தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என தற்போதே அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தங்கள் கட்சிக்கு உள்ள செல்வாக்கு, கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகள் போன்றவற்றை வைத்து அ.தி.மு.க.வினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
விளவங்கோடு தொகுதியில் தற்போது ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 694 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 685 பெண் வாக்காளர்கள், 3 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 382 வாக்காளர்கள் உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8-வது முறையாக மகுடம் சூடுமா? வேறு கட்சிகள் வெற்றியை தட்டிப்பறிக்குமா? என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here