பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை

0
1056

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற பாரதிய ஜனதா முனைப்பு காட்டி வருகிறது. இதையடுத்து பிரதமர் மோடி தமிழகத்தை குறி வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் அடுத்தடுத்து பிரசாரம் மேற்கொண்ட அவர், நாளை (15-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார். கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக நாளை காலை 11 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்கும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு வருகிறார். அங்கு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த பொதுக்கூட்டம் முடிவடைந்து பகல் 12.15 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி திருவனந்தபுரம் செல்கிறார். பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்பட தென் மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகளும் வந்துள்ளனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள ஹெலிகாப்டர் தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் நேற்று மாலை ஹெலிகாப்டர் மூலம் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான மூன்று ஹெலிகாப்டர்கள் கன்னியாகுமரிக்கு வந்து சென்றது. கன்னியாகுமரி முதல் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வரையிலும் பிரதமர் மோடி செல்ல உள்ள பாதையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். சாலையின் இருபுறமும் 5 அடிக்கு ஒரு போலீசாரை நிறுத்தி பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் அந்த சாலையில் போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் விழா நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்த பணியை மேற்கொண்டு உள்ளனர். பிரதமர் மோடி பேச உள்ள மேடை தெற்கிலிருந்து வடக்கு பார்க்கவும் அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் பணிகள் அனைத்தையும் முழுமையாக முடிக்க முனைப்பு காட்டி வருகிறார்கள். பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். பிரதமர் மோடியின் வருகை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா வெற்றிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமையும் என்று பாரதிய ஜனதா நிர்வாகிகள் கருதுகிறார்கள். மோடி வருகையையடுத்து பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர். நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு பிரதமர் மோடி வருகிற 18-ந்தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 19-ந்தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here