இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வருகிறார். முதல் டெஸ்டில்அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் 2, 3-வது டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். இந்நிலையில் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்துகெவின் பீட்டர்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளதாவது: நான்பார்த்தவரையில் இந்திய மண்ணில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் எந்தவித குறைபாடும் கிடையாது. அவருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், வெளிநாடுகளில் ரன்கள் சேர்ப்பது மட்டும்தான்.
ஒரு கிரிக்கெட் வீரரின் கடைசி காலத்தில் அவர் ஒரு சிறந்த வீரர் என்று போற்றப்படுவதற்கு, அவர் அனைத்து நாடுகளிலும் ரன்களையும், சதங்களையும் விளாச வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
அதேபோல் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக ஜெய்ஸ்வால் விளையாடுவதை நான் அருகில் இருந்து தீவிரமாக கண்காணித்து வருகிறேன். எனக்கு தெரிந்து, அவரால் அனைத்து நாடுகளிலும் சதம் விளாச முடியும் என்று நம்புகிறேன். அவர் நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட் ஜாம்பவான் என்ற பெயரை பெறுவார். மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக அவர் மாறுவார். இவ்வாறு கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.