மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நேபாள அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது இந்திய அணி.
நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நேபாள அணிகள் மோதின. இலங்கையில் உள்ள ரங்கிரி தம்புலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஷெபாலி வர்மா – ஹேமலதா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 42 பந்துகளில் 47 ரன்களை எடுத்த ஹேமலதா 13வது ஓவரில் நேபாளத்தின் ருபீனா சேத்ரியிடம் கேட்ச் கொடுத்த வெளியேறினார்.ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும் தனது அசத்தலான பேட்டிங்கால் அணியின் ஸ்கோரை உயர்த்தினார் ஷெபாலி. 26 பந்துகளில் அரை சதத்தை விளாசினார். இது டி20 போட்டிகளில் அவரது பத்தாவது அரை சதமாகும். இப்படியாக 48 பந்துகளில் 81 ரன்கள் குவித்து 15வது ஓவரில் வெளியேறினார் ஷெபாலி.
தொடர்ந்து களமிறங்கிய சாஜனா 10 ரன்கள், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 28 ரன்கள், ரிச்சா கோஷ் 6 ரன்கள் என 20 ஓவர்களில் மொத்தம் 178 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. ஓவர் முடிவில் ரிச்சா கோஷ், ஜெமிமா இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அடுத்த 179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாள அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் ஆடியது. கிட்டத்தட்ட யாருமே அதிக ஸ்கோர்களை எடுக்கவில்லை என்ற நிலையே நீடித்தது. ஓபனராக களமிறங்கிய சீதா ராணா மகர் அதிகபட்சமாக 18 ரன்கள் எடுத்தார். சம்ஜானா 7 ரன்கள், கபிதா கன்வர் 6 ரன்கள், இந்து வர்மா 14 ரன்கள், ருபீனா சேத்ரி 15 ரன்கள் என அடுத்தடுத்த விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 96 ரன்களே எடுத்திருந்தது நேபாள அணி.
இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணி ‘குரூப் – ஏ’ பிரிவில் உள்ளது. முந்தைய போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில் இன்று நேபாள அணியையும் வீழ்த்தியதால், நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய மகளிர் அணி.