ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதி சுற்று 2 ஆட்டத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த அணியின் வெற்றியில் 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில், 12 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசி முக்கிய பங்கு வகித்தார்.
இந்த ஆட்டத்தின் போது அதிவேக ஐபிஎல் சதம் அடிக்கும் சாதனையை நூலிழையில் சூர்யவன்ஷி தவறவிட்டார். எனினும் ஓர் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்து, 65 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தார் சூர்யவன்ஷி. இதனால் சூர்யவன்ஷியை தற்போது கிரிக்கெட் விமர்சகர்கள் ‘யுனிவர்சல் பேபி பாஸ்’ என அழைக்கத் தொடங்கி உள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் வைபவ் சூர்யவன்ஷி கூறியதாவது: ஐபிஎல் தொடரில் அதிவேக சாதனையை தவறவிட்டது போட்டி முடிந்த பிறகே எனக்குத் தெரியவந்தது. என் கவனம் முழுவதும் சிக்ஸர் அடிப்பதிலேயே இருந்தது. எதிர்காலத்தில் கூட நான் சதங்கள் அடிப்பேன். தற்போதைய சூழ்நிலையில் அணியின் ரன்களை அதிகப்படுத்துவதே எனது முதன்மை நோக்கமாக இருந்தது. நான் எனது திட்டத்தின்படி மட்டுமே செயல்படுகிறேன், அதில் ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்ய முயற்சிப்பேன்.
பந்துவீச்சாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை ஆராய்கிறேன் மற்றும் எல்லைக் கோட்டின் தூரத்தைக் கணிக்கவும் முயற்சி செய்கிறேன். நான் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தும்போது, பந்துவீச்சாளர் அழுத்தத்திற்கு உள்ளாகிறார். அடுத்த போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்போம். நான் பந்துவீச்சாளர்களைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை, எனது இயல்பான ஆட்டத்தை விளையாடவே முயற்சி செய்கிறேன். இவ்வாறு வைபவ் சூர்யவன்ஷி கூறினார்.















