நார்வே செஸ் போட்டி அந்நாட்டின் ஒஸ்லோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுடன் மோதினார். இந்த ஆட்டம் 31-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதையடுத்து நடைபெற்ற ஆர்மகெடான் சுற்றில் அலிரேசா ஃபிரோஸ்ஜா வெற்றி பெற்றார்.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இதில் 46-வது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இதன் வாயிலாக பிரக்ஞானந்தா முழுமையாக 3 புள்ளிகளை பெற்றார். 7 முறை சாம்பியனான கார்ல்சனுக்கு நடப்பு தொடரில் இது 2-வது தோல்வியாக அமைந்தது. கிளாசிக்கல் போட்டியில் நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது 2-வது முறையாகும்.
கடந்த 2024-ம் ஆண்டு தொடரிலும் கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தார். 3 சுற்றுகளின் முடிவில் அலிரேசா ஃபிரோஸ்ஜா 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அமெரிக்காவின் வெஸ்ஸி சோ 4 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், குகேஷ் 3.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் 3 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், மேக்னஸ் கார்ல்சன் 1.5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.















