இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

0
409

இங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணி இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதனிடையே ராஜ்கோட்டில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்களும், இங்கிலாந்து அணி 319 ரன்களும் குவித்தன.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 126 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தை ஷுப்மன் கில் 65 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 3 ரன்களுடனும் தொடங்கினர். நைட் வாட்ச்மேனாக களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்த குல்தீப் யாதவ் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதேநேரத்தில், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் 90 ரன்களைக் கடந்து சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக 91 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரன்-அவுட்டானார்.

இந்நிலையில் 3-ம் நாள் ஆட்டத்தின்போது ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறியிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினார். அவருக்கு உறுதுணையாக சர்பிராஸ் கான் அதிரடியாக விளையாடினார்.

முந்தைய நாள் ஆட்டத்தைப் போலவே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் சிக்ஸர்களாக பறக்கவிட்டார். அவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது.

தொடர்ந்து சிக்ஸர்களாக விளாசிய ஜெய்ஸ்வால், தனதுஇரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். மறுமுனையில் சர்பிராஸ் கான் 72 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 430 ரன்களாக இருந்தபோது இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால், 236 பந்துகளில் 214 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 14 பவுண்டரிகளும், 12 சிக்ஸர்களும் அடங்கும்.

இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியின் எந்தவொரு வீரரையும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் நிலைத்து நின்று விளையாட அனுமதிக்கவில்லை.

ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி நிலைகுலைந்தது.

ஜாக் கிராவ்லி 11, பென் டக்கெட் 4, ஆலி போப் 3, ஜோ ரூட்7, ஜானி பேர்ஸ்டோ 4, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 15, பென் போக்ஸ்16, ரெஹான் அகமது 0, டாம் ஹார்ட்லி 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டாக மார்க் வுட் 33 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

39.4 ஓவர்களில் 122 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இதன்மூலம் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணித் தரப்பில் ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்துவீசி 41 ரன்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும், அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

ஆட்டநாயகன் ஜடேஜா: இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஜடேஜா,முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்,2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்என மொத்தம் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

4-வது டெஸ்ட் போட்டி: இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியிலுள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மீண்டும் இணைந்த அஸ்வின்: மருத்துவ அவசர நிலை காரணமாக ராஜ்கோட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியிருந்த அஸ்வின் மீண்டும் அணியினருடன் இணைந்தார்.

தனது தாயாரின் உடல் நலக்குறைவு காரணமாக அஸ்வின் போட்டியிலிருந்து விலகி சென்னை திரும்பினார். இதனால் அவர் 3-ம் நாள் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் சென்னையிலிருந்து மீண்டும் ராஜ்கோட் வந்த அஸ்வின் அணியினருடன் இணைந்தார்.

அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே 2 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் விளாசிய 4-வதுஇந்திய வீரர் என்ற சாதனையை சர்பிராஸ் கான் படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் விளாசிய சர்பிராஸ் கான், 2-வது இன்னிங்ஸில் 68 ரன்கள் சேர்த்தார். சர்பிராஸ் கானுக்கு முன்பாக 1934-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான இந்திய வீரர் திலாஹர் ஹுசைன் முதல் இன்னிங்ஸில் 59 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்களும் சேர்த்திருந்தார்.

அதேபோல் 1971-ல் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகமான சுனில் கவாஸ்கர் முதல் இன்னிங்ஸில் 65 ரன்களும்,2-வது இன்னிங்ஸில் 67 ரன்களும்சேர்த்தார். 2021-ல் நியூஸிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் 105 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 65 ரன்களும் சேர்த்தார். தற்போது இந்த வரிசையில் சர்பிராஸ் கானும் சேர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here