விம்பிள்டன் 2024: அரை இறுதியில் ஜோகோவிச்

0
50

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக்ஜோகோவிச் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 10-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 9-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோத இருந்தார். ஆனால் போட்டி தொடங்குவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்னதாக காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இருந்து விலகுவதாக அலெக்ஸ் டி மினார் அறிவித்தார். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விலகுவதாக அவர், தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜோகோவிச் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. விம்பிள்டன் தொடர்களில் ஜோகோவிச் அரை இறுதி சுற்றில் கால்பதிப்பது இது 13-வது முறையாகும். இதன் மூலம் விம்பிள்டன் வரலாற்றில் அதிக முறை அரை இறுதிக்கு முன்னேறியிருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். அரை இறுதி சுற்றில் ஜோகோவிச், 12ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் அல்லது 25-ம் நிலை வீரரான இத்தாலியின் லோரென்சோ முசெட்டியுடன் மோதக்கூடும்.