உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள கோம்தி நகர் காவல் நிலையத்தில் கவிஞர் நரேஷ் சக்சேனா புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஜூலை 7ஆம் தேதிமாலை 3 மணியளவில் கவியரங்கம் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற நான் புறப்பட்ட சமயத்தில்எனது அலைபேசியில் வீடியோ கால் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், ஆதார் அட்டையைநான் தொலைத்துவிட்டேனா என்றுகேள்வி கேட்டார்.
எனது வங்கிக் கணக்கில் மும்பையில் யாரோ ஒருவர் பல கோடி ரூபாய்க்குப் பண மோசடி செய்திருப்பதாகவும், அது தொடர்பாக மும்பை காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
தன்னை சிபிஐ இன்ஸ்பெக்டர் ரோஹன் சர்மா என்று அந்த நபர் அறிமுகப்படுத்திக் கொண்டார். எனக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் மிரட்டினார்.
ஆனால், நான் முதியவர் என்பதாலும் நல்ல மனிதராகத் தெரிவதாலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவில் விடுதலை செய்ய உதவுவதாகச் சொன்னார். இல்லாவிடில் நான் நீண்டகால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கு என்றுமிரட்டினார். எனது ஆதார் எண், வங்கி கணக்கு எண், அதில் நான்வைத்திருக்கும் சேமிப்புத் தொகை,முதலீடுகள், வருமான வரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்தார். வீடியோ கால் வழியாக எனது அறை முழுக்கபுத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு நான் ஒரு கவிஞர்என்பதை நிரூபிக்க சொன்னார்.
கவிதையை ரசித்த கும்பல்: புகழ்பெற்ற உருது மொழி கவிஞர்களான மிர்ஜா காலிப் மற்றும் ஃபாஸ் ஆகியோரின் கவிதைகளை பாடச்சொன்னார். அதன் பிறகு எனது சொந்த கவிதைகளையும் பாடச்சொல்லி நீண்ட நேரம் கேட்டு ரசித்தார். என்னையும் வெகுவாகப் பாராட்டினார். மாலை 3 மணிக்கு ஆரம்பமான அந்த வீடியோ கால் அழைப்பு கிட்டத்தட்ட இரவு 8 மணிவரை நீடித்தது. மேற்கொண்டு மும்பை சிபிஐ தலைமை அதிகாரி என்னுடன் பேசுவார் என்று அந்த மர்ம நபர் கூறினார்.
அடுத்து சிபிஐ தலைமை அதிகாரி என்று கூறிக்கொண்டு பேசிய நபர் நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதால் 24 மணி நேரத்தில் விடுவிக்கப்படுவேன் என்றும் கூறினார்.
அறையில் முடக்கம்: அறையின் கதவை மூடிவிட்டு குடும்பத்தாருக்குத் தெரியாதபடி பேசும்படி எனக்குக் கட்டளையிட்டார். நானும் அப் படியே செய்தேன். ஆனால் நீண்டநேரம் அறையை விட்டு நான் வெளியே வராததால் எனது மருமகள் கதவை தட்டி திறக்க வைத்து அறைக்குள் வந்து எனது கையிலிருந்து அலைபேசியைப் பறித்து சட்டென அந்த வீடியோ கால் அழைப்பை நிறுத்திவிட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த புகார் மீது கோம்தி நகர் காவல் நிலையம் விசாரணை நடத்தி வருவதாக சம்மந்தப்பட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர்.