பேரவை தலைவர் பேசவிடாமல் தடுக்கிறார்: வேல்முருகன் குற்றச்சாட்டு

0
35

‘சட்டப்பேரவையில் என்னை மட்டும் குறிவைத்து, பேசவிடாமல் பேரவைத் தலைவர் தடுக்கிறார்’ என தவாக தலைவர் தி.வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மீனவர்கள் நலனுக்காக ரூ.576 கோடியில் மீனவர் நலத்திட்டங்களை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக முதல்வருக்கு நன்றி சொல்லி, மத்திய அரசு மீனவர்கள் பிரச்சினையில் இப்படி செய்திருக்கிறதே, தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? என்று சில கேள்விகள் குறித்து பேச எழுந்த ஒரு நிமிடத்துக்குள், ‘நன்றி மட்டும்தான் சொல்ல வேண்டும். நீங்கள் பேசக்கூடாது’ என்று இடையில் குறுக்கிட்டு பேரவைத்தலைவர் அனுமதி மறுத்தார்.

முன்னதாக கடந்த 4-ம் தேதி என் தொகுதி சார்ந்த பிரச்சினைகளை பேசும்போதும் நீங்கள் பேசக்கூடாது என துண்டித்தார். அதைத்தொடர்ந்து அன்றைய தினம் கேள்வி நேரத்தில் துணை கேள்வி கேட்பதற்காக கைதூக்கி கேள்வியை எழுப்பினேன். ஆனால் கேள்வியை முழுமையாக கேட்கவிடாமல் தடுத்தார். இது பேரவை குறிப்பில் இடம்பெற்றிருக்கிறது. என்னிடத்தில் அதற்கான சாட்சி இருக்கிறது. இதெல்லாம் எந்த விதமான ஜனநாயகம்?

நான் என்ன குற்றம் செய்தேன்? எனக்குரிய நேரத்தை, எனக்குரிய வாய்ப்பைத்தானே நான் கேட்கிறேன். அது ஏன் சட்டப்பேரவை தலைவருக்கு எரிச்சலாகிறது? இதைப்பற்றி முதல்வரிடம் கண்டிப்பாக முறையிடுவேன். எனக்கு நீதி கிடைத்தால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தொடர்ந்து பங்கேற்பேன். நீதி கிடைக்கவில்லை என்றால் என் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here