வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

0
77

தேர்தல் முடிவில் அதிருப்தி தெரிவிக்கும் வேட்பாளர்கள் விரும்பும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவுகளை சரிபார்ப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (எஸ்ஓபி) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டது. அதிருப்தி வேட்பாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பதற்கும் வழிவகை உள்ளது. மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவுகளை சரிபார்க்க 8 வேட்பாளர்களும், சட்டப்பேரவை தேர்தல் முடிவு களை சரிபார்க்க 3 வேட்பாளர்களும் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், அதிருப்தி வேட்பாளர்கள் தாங்கள் விரும்பும் வகையில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பதற்கான வசதிகளை தேர்தல் ஆணையம் விரிவுபடுத்தி அதற்கான செயல்பாட்டு வழிமுறைகளை நேற்று வெளியிட்டது.

அதன்படி ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எந்த வாக்குச்சாவடியிலிருந்தும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களை (வாக்குபதிவு இயந்திரம் – கன்ட்ரோல் யூனிட் – விவிபாட்) தேர்வு செய்து சரிபார்க்கலாம். வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட் – விவிபாட் ஆகியவற்றை கலந்து பொருத்தியும் பரிசோதிக்கலாம். வாக்குப்பதிவு இயந்திரங்களை சீரியல் எண் படி தேர்வு செய்தும் சரிபார்க்கலாம்.

இந்த சரிபார்ப்பில் அதிகபட்சம் 5 சதவீத எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடியும். சரிபார்ப்பு ஒத்திகையில் 400 ஓட்டுகள் வரை எந்த வரிசையிலும் செலுத்தி, விவிபாட் சரியான சின்னங்களை காட்டுகிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.

வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இத்தகைய விரிவான தேர்வுகளுடன் கூடிய சரிபார்ப்பு மூலம், வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்த தனது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம் எனவும், இந்த நடைமுறை வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கிறது எனவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.