உதவித் தொகை வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

0
194

மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகைக்கு 14 மாதங்களாக விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் உதவித்தொகையை உடனே வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 200-க்கும்மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி தலைமை வகித்து கூறியதாவது: தமிழக அரசின் உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ள 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இதுவரை எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி நடந்த பேச்சுவார்த்தையின் போது மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது மக்களவைத் தேர்தலும் முடிந்துவிட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரும் நிறைவடைந்துவிட்டது.

ஆனாலும் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தபதிலும் இல்லை. அதேபோல அந்தியோதயா அன்னபோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஏஏஒய் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த பல மாற்றுத் திறனாளிகள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

மேலும், ரூ.1,500 உதவித்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இவை எதுவுமே கிடைக்காமல் மாற்றுத் திறனாளிகள் எவ்வாறு கண்ணியத்துடன் வாழ முடியும். மாற்றுத் திறனாளிகள் வாழ்விழந்து நிற்கின்றனர். இதற்கு மேல்அவர்களை மாவட்ட ஆட்சியர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில், மாற்றுத் திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.