உயர்கல்வித் துறை சார்பில், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கலில் உள்ள கல்லூரிகளுக்கு ரூ.52.75 கோடியில் கட்டப்பட்ட புதியவகுப்பறை, ஆய்வக கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு சார்பில் நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்காலிக கட்டிடங்களில் இயங்கிவந்த புதுக்கோட்டை, ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 12.40 கோடியிலும், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.12.46 கோடியிலும், திருச்சி, மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.14.94 கோடியிலும்புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள் ளன.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.3 52 கோடியில் 8 ஆய்வகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதே போல்,கோயம்புத்தூர், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.9.43 கோடியில் 15 வகுப்பறைகள், 10 ஆய்வகக்கட்டிடங்கள் என ரூ.52.75 கோடியில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் க.பொன்முடி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உயர்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்ப கல்வி ஆணையர் வீரராகவராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.