மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த ரூ.576 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். மீனவர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘கச்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் நம் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படை கைப்பற்றிய படகுகளை திருப்பி தரவேண்டும்’ என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மோடி தனது இலங்கை பயணத்தின்போது இதுகுறித்து அந்நாட்டு அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தோம். அதை பிரதமருக்கும் உடனே அனுப்பி வைத்தோம்.
ஆனால், பிரதமர் மோடி இலங்கை சென்ற நிலையி்ல், தமிழக மீனவர் விடுதலை, கச்சத்தீவு தொடர்பாக பெரிய அளவிலான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இலங்கை சிறையில் வாடும் 97 மீனவர்களும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளும் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது மிகுந்த வருத்தம், ஏமாற்றத்தை தருகிறது. நமது கோரிக்கைகளை மத்திய அரசும், பிரதமரும் புறக்கணி்ப்பதாகவே கருத வேண்டியுள்ளது. மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும், நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நாம் தவறமாட்டோம். அரசு அவர்களுக்கு எப்போதும் துணைநிற்கும்.
தமிழக கடலோரத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மீனவர்கள் தங்களது பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாலும், நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் சிறைபிடிக்கப்பட்டு நாட்டுடமை ஆக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண, மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக தெற்கு பகுதியில் இந்திய பெருங்கடல் நோக்கி செல்ல வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். பாம்பன் பகுதியில் ரூ.60 கோடியிலும், குந்துக்கல் பகுதியில் ரூ.150 கோடியிலும் மீன்பிடி துறைமுக பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளேன்.
மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உரிய தொழில்நுட்ப பயிற்சியுடன், உபகரணங்களும் அளித்து, கடற்பாசி வளர்ப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், விற்பனை தொடர்புடைய தொழில்களில் 7,000 பேரை ஈடுபடுத்தும் சிறப்பு திட்டம் ரூ.52.33 கோடியில் செயல்படுத்தப்படும். கூண்டு அமைத்து மீன், சேற்று நண்டு வளர்ப்பு, பதப்படுத்துதல், விற்பனை தொடர்புடைய தொழில்களை மேற்கொள்ள ரூ.25.82 கோடியில் உபகரணங்கள் வழங்கி, தொடர் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
சுமார் 2,500 மீனவ குடும்பங்களை சார்ந்த பயனாளிகளுக்கு மீன் பதப்படுத்துதல், மீன் உலர்த்தும் தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் அளித்து, பயிற்சி வழங்கி ஊக்குவிக்கும் திட்டம் ரூ.9.90 கோடியில் செயல்படுத்தப்படும். மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க 15,300 பேருக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கும் திட்டம் ரூ.20.55 கோடியில் செயல்படுத்தப்படும்.
மீன்வளம் சார்ந்த மாற்று வாழ்வாதாரமான வலை பின்னுதல், படகு கட்டுமானம், அவற்றை பழுதுபார்த்தல், கருவாடு, வண்ண மீன் தொட்டிகள் தயாரித்தல், படகு ஓட்டுநர் பயிற்சி, கடல் சிப்பி அலங்கார பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்கள் மூலம் 20,100 பேர் பயன்பெறும் திட்டங்கள் ரூ.54.48 கோடியில் செயல்படுத்தப்படும். மீன்வளம் சாராத காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதல், கைவினை பொருட்கள் தயாரித்தல், மசாலா பொடிகள் தயாரித்தல், அழகு கலை பயிற்சி, சிறுதானிய உணவு தயாரித்தல் போன்ற பிற தொழில் வாய்ப்புகளை 14,700 பேருக்கு ஏற்படுத்தி தரும் திட்டம் ரூ.53.62 கோடியில் செயல்படுத்தப்படும்.
தமிழக மீன்வளம், தொழிலாளர் நலம் உள்ளிட்ட அரசுத் துறைகள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவி குழுக்கள், மகளிர் மேம்பாட்டு கழகம், திறன் மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இத்திட்டங்களை செயல்படுத்தும். இவற்றை ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் திட்ட செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.
இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பு செய்ய ஏதுவாக ரூ.360 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள், ரூ.216.73 கோடியில் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் என மொத்தம் ரூ.576.73 கோடியில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன்மூலம், மன்னார் வளைகுடா பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அமைச்சர் விளக்கம்: இதைத் தொடர்ந்து, முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து பல்வேறு கட்சி எம்எல்ஏக்களும் பேசினர். பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘முதல்வர் தற்போது அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும், மத்திய அரசு ஏற்கெனவே முன்னெடுத்துள்ள திட்டங்கள். கூட்டாட்சி தத்துவத்தின்படி, மத்திய, மாநில அரசுகள் இணைந்து மீனவர் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதை பாஜக சார்பில் வரவேற்கிறேன்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ‘‘தமிழக அரசு தரும் திட்டங்களை மட்டுமே முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளாக நிதி தராததால், நாங்கள் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது’’ என்றார்.