ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும்: மணல் கடத்தல் விவகாரத்தில் தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

0
82

மணல் கடத்தல் தொடர்பான மனுவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் பதில் அளிக்கத் தவறினால் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அரசுகள் சட்ட விதிமுறைகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த தவறுவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தல் அத்துமீறி நிகழ்ந்து வருவதாகக் கடந்த 2018-ம் ஆண்டில் மனுதாரர் அழகிரிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தமனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணின் உதவியாளர் வழக்கறிஞர் பிரணவ் சச்தேவ் கூறியதாவது:

சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களுக்கு விடப்பட்ட நோட்டீஸ்களுக்கு இதுவரை அம்மாநிலங்கள் பதில் அளிக்கவில்லை என்று கடந்த 2018-ல் வழக்கு தொடரப்பட்டது. மிகப்பெரிய அளவில் சட்டவிரோத மணல் கடத்தல் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் பஞ்சாப் மாநிலம் மட்டுமே தனது தரப்பு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. மனுதாரர் குறிப்பாக தமிழ்நாடு தொடர்பாக பல கேள்விகளை எழுப்பி உள்ளார். அதற்கு தமிழ்நாடு அரசு நிச்சயம் உரிய விளக்கத்தை அளித்தாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் சஞ்சய் குமார் கூறியதாவது:

தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்கள் அடுத்த ஆறு வாரங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். இதை அவர்கள் செய்யத் தவறினால் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ரூ.20 ஆயிரம்அபராதம் என்பது பெரிய தொகையாக இல்லாது போனாலும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க இந்த உத்தரவு கட்டாயப்படுத்தும்.

இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.