பத்திரங்களாக மாறும் கோயில் தங்க நகைகள்: தெலங்கானா அரசு முடிவு

0
147

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயில்களின் உண்டியல்களில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

தங்கத்தை மும்பை மிண்ட் பகுதியில் உருக்கி, அதனை வங்கிகளில் டெபாசிட் செய்து, அதற்கு தகுந்த பத்திரங்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் வட்டியை கோயிலின் வளர்ச்சி பணிகளுக்கு உபயோகிப்பது என மாநில இந்து சமய அறநிலைய துறை முடிவெடுத்துள்ளது. இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும்.

ஆண்டுதோறும் அதிகரிக்கும் காணிக்கைகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதன் மூலம் அவை பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதுடன் வட்டியும் கிடைக்கும் என்று மாநில அரசு கருதுகிறது.இதையடுத்து சுவாமிகளுக்கு அன்றாடம் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் அணிவிக்கும் தங்கம், வெள்ளி நகைகள் தவிர்த்து மற்றவை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, 825 கிலோ தங்கமும், 39,783 கிலோ வெள்ளி பொருட்களும் உள்ளது தெரிய வந்தது. சில முக்கிய கோயில்களில் மட்டும் தங்கத்தில் டாலர்கள் செய்து விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 39,783 கிலோ வெள்ளியை என்ன செய்வது என இன்னமும் முடிவு செய்யவில்லை.ஆனால், இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.