4 இடங்களில் புற்றுநோய் பரவலை கண்டறியும் பெட் ஸ்கேன்: ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு

0
63

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உள்பட 4 மருத்துவமனைகளில் புற்றுநோய் பரவலை கண்டறியும் பெட் ஸ்கேன் கட்டமைப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார் வெளியிட்ட அரசாணை: கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை அண்ணா புற்றுநோய் மையத்திலும் ‘பெட் ஸ்கேன்’ வசதி அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் முடியாது: இந்நிலையில், சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, திருச்சி, விழுப்புரம், திருவள்ளூர் மருத்துவமனைகளில் புதிதாக பெட் ஸ்கேன் வசதி தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப் பேரவையில் அறிவித்தார். இதையடுத்து, ஆய்வு மேற்கொண்டதில், திருவள்ளூர் மருத்துவமனையில் அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்த முடியாது என்பது தெரியவந்தது.

தனியார் பங்களிப்பு: திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லினாக் எனப்படும் அதிநவீன புற்றுநோய் கதிர் வீச்சு சாதனமும், சிகிச்சை கட்டமைப்பும் வர உள்ளதால் அங்கு பெட் ஸ்கேன் வசதி ஏற்படுத்தலாம் என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக இயக்குநர் அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கினார்.

அரசுக்கு கூடுதல் நிதி சுமையின்றி தனியார் பங்களிப்புடன் அந்த பெட் ஸ்கேன் கட்டமைப்பை அமைக்கவும், ஏற்கனவே உள்ள மருத்துவக் கட்டிடங்களுக்கு இடையூறு இல்லாமல், கூடுதலாக பணியாளர் தேவை இன்றி அதனை செயல்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி, கிண்டி, திருப்பூர், திருச்சி, விழுப்புரத்தில் பெட் ஸ்கேன் மையங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான கொள்முதல் நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here