சென்னை: 31-வது ஆடவர் தேசிய அட்யா பட்யா போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டியை புதுச்சேரி அட்யா பட்யா சங்கம் மற்றும் அட்யா பட்யா ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து புதுச்சேரி ஆசிர்வதிக்கப்பட்ட மதர் தெரசா மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரா என மொத்தம் 17 மாநிலங்கள் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றன. இந்தப் போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆடவர் இறுதிச்சுற்று போட்டியில் தமிழக அணி 13-12, 28-28, 13-11 என்ற புள்ளிகள் கணக்கில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து 24-வது பெண்கள் சப் ஜூனியர் தேசிய அட்யா பட்யா சாம்பியன்ஷிப் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் அனைத்து லீக் ஆட்டங்களிலும் தமிழக மகளிர் அணி வென்று கால் இறுதியில் ஆந்திராவை வீழ்த்தியது. ஆனால், தமிழக அணி, அரையிறுதியில் புதுச்சேரியுடன் மோதி தோல்வி கண்டது. இதையடுத்து தமிழக அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.