தம்புல்லா: தம்புல்லாவில் நடைபெற்ற முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட்போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தம்புல்லாவில் உள்ள ரண்கிரி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் முதலாவது டி20 போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் அசலங்கா 35 பந்துகளில் 59 ரன்கள் (9 பவுண்டரிகள்) குவித்தார்.
பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. அந்த அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
பிரண்டன் கிங் 33 பந்துகளில் 63 ரன்களும், எவின் லீவிஸ் 28 பந்துகளில் 50 ரன்களும் குவித்தனர். ராஸ்டன் சேஸ் 19, ஷெர்பான் ருதர்போர்ட் 14 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து 1-0 என்ற கணக்கில் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இதே மைதானத்தில் இன்று (அக்டோபர் 15) நடைபெறவுள்ளது.