தவெகவினர் தற்குறிகள் அல்ல கூர்மையான அம்புக்குறிகள் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். அரசியலுக்கு வருவது தொடர்பாக விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும் அவர் கூறினார்.
சென்னை உத்தண்டியில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என மக்களிடம் கேட்டிருந்தேன்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ‘நீங்கள் வராமல் வேறு யார் வருவார்கள்? கட்டாயம் அரசியலுக்கு வாருங்கள்’ என மிகுந்த அன்போடும் உரிமையோடும் அழைப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக, நல்ல முடிவை எடுத்துள்ளேன். விரைவில் எனது ரசிகர்களை அழைத்து, என் அம்மாவை மேடையில் அமர வைத்து அந்த நல்ல முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்.
அரசியலுக்கு வருகிறேனா இல்லையா என்பதை அறிவித்த பிறகே, தொடர்ந்து படங்களில் நடிப்பேனா என்பதைப் பற்றித் தெரிவிப்பேன். தவெக அரசின் செயல்பாடுகள் நன்றாக உள்ளன. புதிதாக ஒரு வீட்டுக்கு குடிபெயர்ந்தால் அங்குள்ள பிரச்சினைகளை கண்டறிந்து சரிசெய்யவே சிறிது காலம் பிடிக்கும்.
மேலும், அங்குள்ள தெரு நாய்கள் புதிதாக வந்த நம்மைப் பார்த்து கத்தத்தான் செய்யும். அதைக் கட்டுப்படுத்த அதற்கு பிடித்த பிஸ்கட்டையோ அல்லது பிரியாணியையோ கொடுத்து சமாளிக்க நேரம் எடுக்கும்.
அதுபோலவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு நாம் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். மாற்றம் வேண்டும் என நினைத்தோம். இப்போது மாற்றம் வந்துவிட்டது. விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் யாரும் தற்குறிகள் அல்ல.
அவர்கள் தவெகவின் கூர்மையான அம்புக்குறிகள். நான் சண்டை போடவோ, வெறுப்பு அரசியல் செய்யவோ இங்குவரவில்லை. என்னால் முடிந்ததைமக்களுக்கு செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.















