சென்னையில் இன்று மாலை நடைபெறும் விழாவில் 665 போலீஸாருக்கும் முதல்வர் விஜய் தனது கைகளாலேயே பதக்கங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை காவல் துறையினரிடம் வலுத்துள்ளது.
தமிழகத்தில் சிறப்பாகப் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள், காவலர்கள், சீருடைப் பணியாளர்களை கவுரவித்து ஆண்டுதோறும் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் காவல் பதக்கம், முதல்வர் காவல் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம், சிறந்த புலனாய்வு பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
குற்றப் புலனாய்வு, சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு, மக்கள் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய சுமார் 665 போலீஸ் அதிகாரிகள், காவலர்கள், தீயணைப்புத் துறையினர், பிற சீருடைப் பணியாளர்கள் பதக்கங்களைப் பெற உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகம், சென்னை காவல்துறை இணைந்து செய்துள்ளன. இந்நிலையில், விழாவில் முதல்வர் விஜய் 60 பேருக்கு மட்டும் தனது கைகளால் பதக்கங்களை வழங்குவார். மற்றவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் டிஜிபி, கூடுதல் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பதக்கங்களை வழங்குவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான ஒத்திகையும் முடிந்துள்ளது. நிகழ்ச்சி நிரலின்படி முதல்வர் வருகைக்கு 2 மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் நேரடியாக பதக்கம் வழங்க இயலாது என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், முதல்வரிடம் இருந்து நேரடியாக பதக்கம் பெறுவோம் என்று எதிர்பார்த்திருந்த போலீஸார், அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ‘விழாவில் பைக் சாக சம், துப்பாக்கி சாகசம், அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சிகளுக்கான நேரத்தை குறைத்து, பதக்கம் பெறும் 665 பேருக்கும் முதல்வர் விஜய் தனது கைகளாலேயே பதக்கங்களை வழங்கி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்பதே காவல் துறையினர், அவர்களது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.















