முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குளப்புறம் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர் செல்வன் என்பவர் ஊராட்சி தலைவர் மனோன்மணிக்கு, பொதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தடையாக செயல்படுவதாகவும் புகார் எழுந்தது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரை இடமாற்ற வேண்டும் என கேட்டு முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குளப்புறம் ஊராட்சி தலைவர் மனோன்மணி தலைமையில் திமுகவினர் நேற்று மதியம் திடீரென உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்து ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு சென்றனர்.
அப்போது புதுக்கடை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆணையாளர் பணியின் நிமித்தமாக அலுவலகத்திற்கு வரவில்லை. எனவே திங்கட்கிழமைக்குள் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தபின் போராட்டத்தை திமுகவினர் கைவிட்டனர். இதில் போலீசாருக்கும் திமுகவினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் மரிய சிசுகுமார், மாவட்ட பொருளாளர் ததேயு பிரேம்குமார், திமுக ஒன்றிய துணை செயலாளர் அம்சி நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.