ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் பழமையான ஸ்ரீரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில்கள் உள்ளன. இந்நிலையில், சென்னைமெட்ரோ திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்காக, கோயிலின் ராஜ கோபுரத்தை இடிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையைச் சேர்ந்த ‘ஆலயம் காப்போம்’ கூட்டமைப்பின் தலைவரான பி.ஆர்.ரமணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலுக்காக கோயில்ராஜகோபுரத்தை இடிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும், எனக்கோரியிருந்தார். அதன்படி இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், ரயில் நிலைய நுழைவு வாயிலை வேறு பகுதிக்கு மாற்ற முடியுமா என்பது குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசார ணைக்கு வந்தது.அப்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயேஷ் டோலியா, ‘தற்போதைய நிலையில், தொழில்நுட்ப ரீதியாக ஆயிரம் விளக்கு ரயில் நிலைய நுழைவு வாயிலை வேறுஇடத்துக்கு மாற்றுவது சாத்திய மில்லை’ என்றார்.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி, ‘ஏற்கெனவே கோயிலுக்கு எதிராகத்தான் நுழைவு வாயில்வர திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது விநாயகர் கோயிலை அகற்றிவிட்டு, அந்தஇடத்தில் மெட்ரோ நுழைவு வாயில்வரும்படி மாற்று திட்டத்தை மெட்ரோ ரயி்ல் நிர்வாகம் கூறுகிறது. இதை ஏற்க முடியாது. அருகில் உள்ள யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன வளாகத்தில் உள்ள காலியிடத்தில் நுழைவு வாயிலை அமைக்கலாம்’ என்றார்.
அதையேற்ற நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் தெரிவித்துள்ளபடி அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும்படி மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.