பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் துருக்கி, அஜர்பைஜானுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஹர்ஷ் கோயங்கா கூறியுள்ளதாவது:
இந்தியர்கள் அதிக அளவில் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். இதனால் அந்த நாடுகளுக்கு கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4 ஆயிரம் கோடியை இந்தியர்கள் சுற்றுலாவுக்கு செலவழித்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
அந்தப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவியை துருக்கியும், அஜர்பைஜானும் உதவின. துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா மூலம் ஏராளமான பணத்தை நாம் செலவழித்து வருகிறோம். இதனால் அந்த நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது, அந்த நாடுகளில் ஓட்டல்களி்ல் வர்த்தகம், திருமண வைபவங்கள், விமானச் சேவைகள் வளர்ந்து வருகின்றன. இந்தியர்கள் அதிக அளவில் அங்கு செல்வதால்தான் அந்த நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி பெறுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் அந்த 2 நாடுகளுக்கும் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். இந்தியாவிலேயே ஏராளமான அழகிய இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு இந்தியர்கள் சென்று வரலாம். ஜெய்ஹிந்த்..! இவ்வாறு அந்த பக்கத்தில் ஹர்ஷ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
ஹர்ஷ் கோயங்காவின் இந்தப் பதிவுக்குப் பிறகு ஏராளமான இந்திய சுற்றுலா ஏஜென்சிகள் துருக்கி, அஜர்பைஜனா நாடுகளுக்கான புக்கிங்குகளை ரத்து செய்யத் தொடங்கியுள்ளனர். 2 நாடுகளுக்கும் சுமார் 50 சதவீத புக்கிங்குகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2 இடங்களுக்கான முன்பதிவுகளை ரத்து செய்த பின்னர் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாலி, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலாவை புக்கிங் செய்யத் தொடங்கியுள்ளனர். அதேபோல் இந்தியாவிலுள்ள சுற்றுலா இணையதளங்கள், துருக்கி ஏர்லைன்ஸ் விமானச் சேவைகளை புக்கிங் செய்ய மறுத்துள்ளனர்.
இதுகுறித்து இக்ஸிகோ சுற்றுலா இணையதளம் தனது எக்ஸ் தளத்தில் கூறும்போது, “ துருக்கி, அஜர்பைஜான், சீனா போன்ற நாடுகளுக்கு விமான டிக்கெட்கள், ஓட்டல் பதிவுகளை நாங்கள் ரத்து செய்துவிட்டோம். எப்போதுமே தேசத்துக்குத்தான் நாங்கள் முன்னுரிமை தருவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கோ ஹோம்ஸ்டேஸ் சுற்றுலா இணையதளம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவுக்கு எதிரான நிலையை துருக்கி எடுத்துள்ளதால், துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நாங்கள் முடித்துக் கொண்டு விட்டோம். இனிமேல் எங்களது சுற்றுலாத் திட்டங்களில் துருக்கி இருக்காது. ஜெய்ஹிந்த்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி, அஜர்பைஜான் போன்ற நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். கடந்த 2024-ல் மட்டும் துருக்கிக்கு 3.3 லட்சம் இந்தியர்கள் சுற்றுலா சென்றிருந்தனர். 2023-ல் 2.74 லட்சம் இந்தியர்கள் அங்கு சுற்றுலா சென்று வந்தனர். அதேபோல் அஜர்பைஜான் நாட்டுக்கு 2024-ல் 2.43 லட்சம் இந்தியா சுற்றுலாப்பயணிகளும், 2023-ல் 1.17 லட்சம் இந்தியர்களும் சுற்றுலா சென்று வந்தனர்.
தற்போது போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் நின்றதால், அங்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.