பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் (பிஎஸ்எஃப்) இந்தியாவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த மாதம் 23-ம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் தவறுதலாக சென்று பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்தபோது, பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர். எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற குமார் ஷா, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டார். அப்போதுதான் அவர் பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டதாக பிஎஸ்எஃப் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூர்ணம் குமார் ஷா மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். பூர்ணம் குமார் ஷாவின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது மனம் உடைந்த ரஜனி, “எனது சிந்தூரை(கணவர் பூர்ணம் குமார் ஷா) திருப்பிக் கொடுங்கள்” என்று கதறி அழுதார்.
இந்நிலையில், பூர்ணம் குமார் ஷா இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் நேற்று ஒப்படைத்துள்ளது. இந்தியா தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் விடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பஞ்சாபில் உள்ள அட்டாரி – வாகா எல்லைப் பகுதி வழியாக நேற்று காலை 10.30 மணிக்கு பூர்ணம் குமார் ஷாவை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து பூர்ணம் ஷாவின் மனைவி, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேபோல், இந்தியாவிடம் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரும் பாதுகாப்பாக பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.