திருவட்டார் அருகே உள்ள காட்டாதுறை இரவிபுதூர்கடை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 53). இவர் திருவட்டார் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் விடுமுறை என்பதால் நாகராஜன் வீட்டில் இருந்து காரில் நாகர்கோவிலுக்கு வந்தார். தேரேக்கால்புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கார் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் லேசாக மோதியது. இதில் நாகராஜனுக்கு காயம் ஏற்படவில்லை. இருப்பினும் நாகராஜன் இதுகுறித்து புகார் அளிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் மனு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென நாகராஜன் மயங்கி விழுந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நாகராஜனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவி னர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.