பிரபல WWE மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டு நடக்கவுள்ள ரஸ்ஸல்மேனியா 41 போட்டிதான் தான் கலந்துகொள்ளும் கடைசி போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் டொரான்டோ நகரில் இன்று (ஜூலை 7) நடைபெற்ற ‘மனி இன் தி பேங்க்’ மல்யுத்த போட்டியின்போது சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த ஜான் சீனா தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
ஜான் சீனா மைக்கை எடுத்து பேசத் தொடங்கியபோது ரசிகர்கள் கூட்டம் “நோ.. நோ” என்று கூச்சலிட்டது. பின்னர் பேசிய அவர், “இந்த இரவில், நான் WWE-லிருந்து ஓய்வு பெறுவதை அதிகாரபபூர்வமாக அறிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் உடனடியாக ஓய்வு பெறப் போவதில்லை என்றும் 2025-ம் ஆண்டு நடக்கவிருக்கும் ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் லாஸ் வீகாஸ் நகரில் நடக்க உள்ள ரஸ்ஸல்மேனியா 41 ஆகிய போட்டிகளுக்குப் பிறகு முழுமையாக ஓய்வு பெறப்போவதாக தெரிவித்தார்.
2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமான ஜான் சீனா தன்னுடைய தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களிடையே சூப்பர்ஸ்டாராக உயர்ந்தார். அவருடைய என்ட்ரி இசை பலருடைய ரிங்டோனாக இருந்தது. மேலும் WWE ஜாம்பவான்களான தி ராக், ட்ரிபிள் ஹெச், ரேண்டி ஆர்ட்டன், தி அண்டர்டேக்கர் உள்ளிட்டொருடன் மோதியுள்ளார்.
மல்யுத்தம் தவிர ’தி சூசைட் ஸ்குவாட்’, ‘ஃப்ரீலான்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், டிசி காமிக்ஸின் பிரபலமான ‘பீஸ்மேக்கர்’ வெப் தொடரில் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.