மோடியின் வருகையை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்க்கின்றன – ரஷ்யா

0
39

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் வருகையை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்ப்பதாக மாஸ்கோவின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

“மேற்கத்திய நாடுகள் இந்திய பிரதமர் மோடி, ரஷ்யாவுக்கு வருகை தருவதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மேலும், இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன. பொறாமையால் இப்படி செய்கின்றன. இது ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான உறவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் பார்க்கிறோம்.இது அரசு முறை பயணம் தான். இருந்தாலும் இரு தலைவர்களும் பிரத்யேகமாக சந்தித்து பேசவும் உள்ளனர்” என பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இதனை ரஷ்ய அரசு செய்தி நிறுவனத்தின் வசம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய, ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் டெல்லியில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அதன்பிறகு 2022, 2023-ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய, ரஷ்ய உச்சி மாநாடு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றார். இந்த சூழலில் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக ரஷ்யாவுக்கு அவர் செல்கிறார். தற்போதைய சூழலில் இந்திய பிரதமரின் ரஷ்ய பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பயணத்தின் போது பிராந்திய, சர்வதேச நிலவரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள். பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு மதிய விருந்து அளிக்க உள்ளார். ரஷ்யாவில் வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாஸ்கோவில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.