டி20 போட்டியில் அபிஷேக் சர்மா சதம்: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்திய அணி

0
116

ஜிம்பாப்வே அணிக்கெதிரான 2-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 2-வது டி20 ஆட்டம் நேற்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களைக் குவித்தது. ஷுப்மன் கில் 2 ரன்களில், முஸராபானி பந்தில் வீழ்ந்தார். ஆனால் 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மாவும், ருதுராஜ் கெய்க்வாடும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.

அபிஷேக் சர்மா 100 ரன்கள் (7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களும் (47 பந்துகள், 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர்), ரிங்கு 48 ரன்களும் (2 பவுண்டரி, 5 சிக்ஸர்) குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

ஜிம்பாப்வே தரப்பில் மாதேவரே 43, ஜாங்வே 33, பென்னட் 26 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார், அவேஷ் கான் ஆகியோர் தலா 3, ரவி பிஷ்னோய் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகளிடையிலான 3-வது டி20 சர்வதேச போட்டி இதே மைதானத்தில் வரும்10-ம் தேதி நடைபெறவுள்ளது.

குறைந்த பந்துகளில் 100: குறைந்த பந்துகளில் டி20 சர்வதேச போட்டிகளில் சதம் விளாசிய 4-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அபிஷேக் சர்மா செய்துள்ளார். அவர் 46 பந்துகளில் சதம் விளாசினார். முதலிடத்தில் ரோஹித் சர்மாவும் (35 பந்துகள்), 2-வது இடத்தில் சூர்யகுமார் யாதவும் (45 பந்துகள்), 3-வது இடத்தில் கே.எல்.ராகுலும் (46 பந்துகள்) உள்ளனர்.